“மன்றம் வந்த தென்றலுக்கு” என்ற பாடலின் பின்னணி இசையை மட்டும் ஒலித்துகொண்டிருந்தது அந்த கேரளத்து பேக்கரியின் ஸ்பீக்கர்கள், அலுவலக நடப்புகள் சூழ அந்த கேரளா பேக்கரியில் அமர்ந்திருந்தோம். இந்த ட்ரீட் கொடுக்குற கலாச்சாரத யார் கண்டு பிடிச்சாங்கன்னு தெரியல, எது எதுக்குத்தான் ட்ரீட் கேட்கிறதுன்னு அளவேயில்லை புது ட்ரெஸ், புது ஹேன்ட் பேக், புது செல்போன் என எது வாங்கினாலும் உடனே ட்ரீட்ன்னு சொல்லிடுறாங்க. அன்று சக அலுவலர் ஒருவர் புது மொபைல் வாங்கியதற்கான ட்ரீட். அந்த பேக்கரியில் வெயிட்டர் கிடையாது தேவையானவற்றை ஆர்டர் செய்து நாமே வாங்கி சாப்பிட வேண்டும்(Self Service). அனைவரும் ஆர்டர் செய்வதில் மும்மரமாக இருந்தனர், நானோ ‘அடுத்தவங்க சாப்பிடுறத பார்த்து ஆர்டர் பண்ணி எவ்வளவு நாளைக்குத்தான் சாப்பிடுறது?’ நாமாக ஆர்டர் பண்ணலாம்னு மெனு கார்டை பார்த்து சாப்பிட வெஜ் ரோல் ஒன்றும் குடிக்க கிரீன் டீ (ட்விட்டர்ல அடிக்கடி கிரீன் டீக்கு மார்கெட்டிங் நடக்குது அப்படி என்னதான் இருக்கும்ன்னு பார்க்கலாம்னு) ஆர்டர் செய்துவிட்டு சக அலுவலர்கள் சிலரின் வருகைக்காக காத்திருந்தோம். “மாலை மங்கும் நேரம்,இளையராஜா மெல்லிசை வித் கிரீன் டீ” என ஸ்டேட்டஸ் அப்டேட் போடலாம்ன்னு நினைச்சிட்டு இருந்தேன்.
அந்த நேரத்தில் பேக்கரி முன்னாடி பெரிய வெள்ளை கலர் கார் ஒன்று வந்து நின்றது (சினிமால ரவுடிங்க வருவாங்களே அது மாதிரி கார் – ஸ்கார்பியோ). அந்த காரிலிருந்த இறங்கியவரை பார்த்ததும் யூகித்தேன் அவர் ஒரு அரசியல்வாதியென, வெள்ளை சட்டை, கட்சி கரை போட்ட வெள்ளை வேஷ்டி அணிந்தவர் கூட மனைவி மகன்கள் இருவரோடு குடும்ப சகிதமாக இறங்கி பேக்கரியின் உள்ளே வந்து அமர்ந்தனர். வந்தவரோ தன் மனைவியிடம் “என்ன வேணுமோ சாப்புடுங்க எனக்கு ஒரு டீ மட்டும் போதும்” என கூறி பேக்கரியில் இருந்த ஒருவரை “டேய் தம்பி இங்க வாடா” என அழைத்தார் அந்த நபர் வந்ததும் “சூடா என்னடா இருக்கு?” என்றார் அதற்க்கு மெனு கார்டை எடுத்து நீட்டி “டேபிள் சர்வீஸ் கிடையாது சார், என்ன வேணுமோ அதை நீங்களே ஆர்டர் செய்து வாங்கிக்கணும்” (என மலயாளத்தில் கூறினார்) இதை கேட்ட அரசியல்வாதி “அதெல்லாம் முடியாது, நாங்க கேட்கிறதை கொண்டு வா போடா” என்றார்.
அந்த நபரோ பேக்கரி மேனேஜரிடம் சென்று விளக்கினார், அவரும் சர்வீஸ் செய்ய சொல்ல, திரும்பி வந்து என்ன வேணும் என்று கேட்டார் அதற்க்கு அவர் நக்கலாக சிரித்தபடி “அவங்களுக்கு என்ன வேனும்னு கேளு எனக்கு ஒரு டீ சர்க்கரை கம்மியா போட்டு எடுத்துட்டு வாடா” என்றார் சரி என அவர்களிடம் ஆர்டர் கேட்டு சென்றார், ஆர்டர் செய்தவற்றை எடுத்து வர சிறிது நேரம் ஆனது அதற்க்கு “டேய் டீ சொல்லி எவ்வளவு நேரம்டா ஆச்சு, சீக்கிரம் வாடா” என மரியாதையில்லாமல் சத்தமாக பேசினார். அந்த பேக்கரி நபரோ டீ மற்றும் அவர்கள் ஆர்டர் செய்ததை கொண்டுவந்து வைத்துவிட்டு மலயாளத்தில் “சார் நீங்க பேசுறது சரியில்லை..!”என்றார். அதற்க்கு அவரோ “என்னடா சொல்லுற?” என்று கேட்டு முடிப்பதற்குள் அந்த நபர் சென்றுவிட்டார். அரசியல்வாதி திரும்ப ”டேய், பில் எவ்வளவு ஆச்சு கொண்டாடா நேரமாச்சு” என மறுபடியும் சத்தமாக கூறினார். அந்த பேக்கரி நபர் பில் கொடுத்துவிட்டு மறுபடியும் மலயாளத்தில் “சார் நீங்க பேசுறது சரியில்லை..!” என்றார். அந்த அரசியல்வாதி கோவமாக அவர் சட்டையி பிடிச்சு “ஏண்டா, யார்ருகிட்ட வந்து என்ன பேசுற நான் யாரு தெரியுமா, கட்சில நான் எவ்ளோ பெரிய ஆள் தெரியுமா” என கூறி அடிக்க போனார். (“என்னை பார்த்து ஏண்டா அந்த கேள்வியை கேட்ட?”ன்னு கவுண்டமணி அடிக்க போற மாதிரியே போனார்) உடனே பேக்கரி ஊழியர்கள் அனைவரும் அந்த அரசியல்வாதியிடம் சண்டைக்கு வந்தனர்.
இதை பார்த்த எனக்கு ஒன்றும் புரியவில்லை, அருகில் இருந்தவர்கள் அவரை பிடித்து சமாதானப்படுத்தி என்ன பிரச்னை என கேட்டனர் அதற்க்கு அவர் அவனுக்கு எவ்வளவு தைரியமிருந்தால் திரும்ப திரும்ப “என் சம்சாரம் சரியில்லைன்னு” சொல்லுவான் என்றார். இதைகேட்ட அருகில் இருந்தவர்களில் ஒருவர் “சார் அவர் மலையாளத்துல சொல்லிருக்கார், மலயாளத்துல ‘சம்சாரம்’ன்னா ‘பேச்சு’ன்னு அர்த்தம், நீங்க அவரை மரியாதையில்லாம பேசினீங்க அதான் அவர் உங்க பேச்சு சரியில்லைன்னு சொல்லிருக்கார்” என விளக்கினார். இதை கேட்ட அந்த அரசியல்வாதி பில் பணத்தை கொடுத்துவிட்டு மீதி சில்லரை(செம பல்பு) வாங்கிகொண்டு குடும்பத்துடன் ஓட்டமும் நடையுமாக வெளியேறினார்.
அப்போத்தான் தெரிஞ்சுது சிலருக்கு ‘கட்சி கரை வேஷ்டி,வெள்ளை சட்டை போட்டா அரசியல் தலைவர் ஆன நினைப்பு வந்திடும் போல’ன்னு, ஒரு சிலர் அரசியல்வாதி என்ற பெயரில் செய்யும் தவறுகளுக்காக அத்தனை அரசியல்வாதிகளுக்கும் கெட்ட பெயர்.மேலும் பதவி ஒருபோதும் ஒருவரை பெரியமனிதன் ஆக்காது, நாம் பெரிய மனிதராகவேண்டுமானால் நமக்கு முதலில் பணிவுதான் தேவை.
இதைத்தான் அழகாக வள்ளுவர்
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து
என கூறியிருக்கிறார்.
இவ்வளவு சொல்லிட்டு முக்கியமான விஷயத்தை சொல்ல மறந்துட்டேன் உண்மையாவே கிரீன் டீ பிரமாதம் :)