Tuesday, 21 May 2013

பெற்றோர்களுக்காக

வேலைக்கு சென்ற பிறகு முதன் முதலாக விடுமுறைக்கு நான் வீட்டிற்கு வந்திருந்த ஞாயிற்றுகிழமை அது, மாலை ஒரு 6 மணியளவில் அப்பாவின் நெருங்கிய நண்பர் வந்திருந்தார்,இருவரின் நட்பும் பள்ளி காலத்திலிருந்து இன்று வரை தொடர்கிறது. இருவர் வீட்டிலும் எந்த விஷேசமானாலும் ஒருவரையொருவர் கலந்து ஆலோசிக்காமல் செய்வது கிடையாது.அவருக்கு ஒரே பையன் BE-CSC முடித்து விட்டு படிப்பிற்கு சம்பந்தமே இல்லாத தானியங்களை எக்ஸ்போர்ட் செய்யும் நிறுவனத்தில் தென்னிந்திய விற்பனை மேலாளராக வேலை செய்து கொண்டிருக்கிறார்.

அவர் வந்ததும் அப்பா என்னிடம் “அம்மா சித்தப்பா வந்திருக்கார் பாரு தண்ணீர் கொண்டுவா, அப்படியே டீ போட்டு கொண்டுவாம்மா” என்றார் நான் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தேன். சித்தப்பா என்னிடம் “வேலை எப்படிமா?பிடிச்சிருக்கா? எப்போ டிரெயினிங் முடியும்?” என விசாரித்தார். நான் “வேலை நல்லா இருக்குங்க சித்தப்பா பிடிச்சிருக்கு, இன்னும் நாலு மாதத்துல முடிந்துவிடும்” என்றேன் பின் “சித்தி எப்படி இருக்காங்க, அண்ணா எப்போ ஊருக்கு வந்தாங்க? என்றேன். “நல்லா இருக்காங்கம்மா, தம்பி (பெரும்பாலும் எங்க ஊரில் மகனை பற்றி மற்றவர்களிடம் கூறும்பொழுது தம்பி என்றே அழைப்பார்கள்) படிப்புக்காக வாங்கின லோன் இன்னும் இருக்குமா அது விஷயமா போன வாரம்தான் வந்திருந்தான்” என்றார் “சரி” என கூறி டீ போட சமையலறைக்குள் சென்றேன்.

சமையலறையில் டீ வைத்துக்கொண்டே அவர்கள் உரையாடல்களை கவனித்தேன் ( சத்தியமா ஒட்டு கேட்கலைங்க) அப்பா அவரிடம் “சொல்லு மணி என்ன விஷயம் தம்பிக்கு ஏதாவது ஜாதகம் வந்துச்சா? அந்த லோன் விஷயம் என்ன ஆச்சு இன்னும் எவ்வளவு கட்ட வேண்டி இருக்கு என்றார்” அதற்க்கு அவர் “ஜாதகம் எல்லாம் வரலை,சும்மாதான் பாப்பா (என்னையத்தான்) வந்திருக்குன்னு நங்கை (அண்ணி) சொல்லுச்சு அதான் பார்த்துட்டு போலாம்னு வந்தேன்” என்றவர் தொடர்ந்து “அவன் படிப்பு செலவுக்காக 5 லட்சம் பேங்க் கடன் வாங்கினதுல இன்னும் 3 லட்சம் இருக்கு இப்பத்தான் அவனுக்கு சம்பளம் ஜாஸ்தி பண்ணியிருக்காங்க இன்னும் ரெண்டு வருசத்துல முடிஞ்சிடும், என்றார், அதற்க்கு அப்பா “அப்புறம் என்ன ரெண்டு வருசமங்கிறது சீக்கிரம் போய்டும் விடு, அவனுக்கு பொண்ணு பார்க்கிற வேலையை பாரு” அவரோ “எங்க அவன்தான் லோன் கட்டி முடிச்சதுக்கு அப்புறம்தான் கல்யாணத்தை பற்றி பேச்சுன்னு ஒரே முடிவா சொல்லிட்டான்” என்றவர் “நீயெல்லாம் பாரு பேங்க்ல லோன் வாங்காமலே படிக்க வைச்சு வேலைக்கு அனுப்பிட்ட” என்றார்.

அப்பா “நான் ஏன் லோன் வாங்கலைன்னா நாளைக்கு என் பொண்ணு வந்து என்கிட்டே ‘உங்க பொண்ணு நான் எனக்காக இல்லாட்டியும் என் படிப்புக்காக கூட உங்களால திட்டமிட்டு சேமிச்சுவைக்க முடியாதா?’ ன்னு கேட்டா நான் பதில் சொல்லட்டும்”என்றார். அவரோ “ஆமாம், கண்டிப்பா உன் பொண்ணு கேட்பா” என்றார்.

அப்பா “அதுனாலதான் அவ சின்ன வயசா இருக்கிறப்ப இருந்தே அவ படிப்புக்காக சேமிச்சு வைக்க ஆரம்பிச்சேன்” என்றார் அவர் என் படிப்புக்காக லோன் வாங்கியிருந்தால் நான் கேட்பேன் என அவர் நினைத்தை கண்டிப்பா கேட்டிருப்பேன்.

அதுனால அப்பாக்களே எங்களுக்காக இல்லாடியும் எங்க படிப்புக்காக திட்டமிட்டு சேமியுங்க.

1 comment:

  1. தொலைனோக்கு பார்வைங்க உங்களுக்கு எதிர்காலத்த நாம உருவாக்கறம்கிறத தெளிவா சொல்லிடீங்க...

    ReplyDelete